எவரையும் தோற்கடிப்பதற்காக ‘மொட்டு’ கட்சியை உருவாக்கவில்லை: பஸில் ராஜபக்ஷ

எவரையும் தோற்கடிப்பதற்காக நாம் கட்சியை உருவாக்கவில்லை, நாட்டு மக்களை வெற்றிபெற வைக்கவே கட்சியை உருவாக்கினோம் என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளரும் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 5ஆவது தேசிய மாநாடு நேற்று கொழும்பு தாமரை தடாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சியை எவரையும் தோற்கடிக்கும் நோக்கில் நாம் உருவாக்கவில்லை. நாட்டையும், நாட்டு மக்களையும் வெற்றிபெற வைக்கவே கட்சியை கட்டியெழுப்பினோம். இன்றும் அதே கொள்கையுடன் பயணிக்கின்றோம்.

எமது கட்சிக்கு நாடு முழுவதும் மட்டுமல்ல உலக நாடுகளிலும் அங்கத்தவர்கள் உள்ளனர். எதிரிகளால் விடுக்கப்படும் சவால்களைக் கூட நாம் ஆசிர்வாதமாக ஏற்றே பயணித்தோம்.
அத்தகைய சவால்களே எம்மை பலப்படுத்தின. எதிர்காலத்திலும் பிரமாண்டமான அரசியல் வெற்றிகளை பெறுவோம். அதன் மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவைகள் வழங்கப்படும்.

எனவே, விரோதம், வைரமின்றி அனைவருடனும் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியானது ஒரு இனத்துக்கு, மதத்துக்கு, குலத்துக்குரிய கட்சி கிடையாது. சகலருக்குமான கட்சியாகும். எமது சகோதரக்கட்சிகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவோம்.

எதிர்காலத்தில் பல சவால்கள் உள்ளன. அவற்றுக்கு முகங்கொடுப்போம். பின்வாங்க வேண்டாம். கிராம மட்டத்தில் உரிய தலைமைத்துவத்தை வழங்குமாறு கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!