ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிக்க தகுதியற்றவர்கள்: சுனில் ஹந்துனெத்தி

தற்போதைய ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் ஆட்சியில் நீடிப்பதற்கு தகுதியற்றவர்கள் என ஜே.வி.பி கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
சீன உர நிறுவனம் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
சீன உர நிறுவனம் இலங்கைக்கும், விவசாய அதிகாரிகளுக்கும், ஊடங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கடிதம் வெளியிட்டுள்ளது.

சீன நிறுவனத்திற்கோ அல்லது சீனாவிற்காகவோ இந்த உர கப்பலை இலங்கைக்கு கட்டாயம் விற்பனை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.

இந்த உரக் கப்பல் முழுவதையும் கடலில் கொட்டினாலும் சீனாவிற்கும் குறித்த உர நிறுவனத்திற்கும் நட்டம் ஏற்படப் போவதில்லை.

ஏன் சீன நிறுவனம் இலங்கையில் இந்த உரத்தை விற்பனை செய்ய இவ்வளவு முயற்சிக்கின்றது.
ஏனென்றால் ஏற்கனவே இலங்கைக்கு உரம் விற்பனை செய்வதற்காக தரகுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு சீன உர நிறுவனமொன்றினால் இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுப்பதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களை தொடர்ந்தும் ஆட்சி பீடத்தில் அழகு பார்ப்பதா, இல்லையா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.