கரன்னகொடவுக்கு எதிரான மனு – விசாரிக்காமலேயே தள்ளுபடி!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஒஃப் த ஃப்ளீட் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அதிகுற்றப் பத்திரத்தை வாபஸ் பெறுவதாக சட்டமா அதிபர் அறிவித்தமையை சவாாலுக்கு உட்படுத்தி, இளைஞர்களின் பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்யாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.
    
தமிழ் இளைஞர்கள் 11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, நீதிபதிகள் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகுற்றப் பத்திரத்தை வாபஸ் பெறுவதாக சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஒக்டோபர் 13ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.
அதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, ஒருவருக்கு எதிராக அதிகுற்றப் பத்திரம் தாக்கல் செய்யவோ அல்லது செய்யாமல் விடவோ சட்டமா அதிபருக்கு அதிகாரம் உள்ளதாகவும் அதில் நீதிமன்றம் தலையிடாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா அறிவித்தார்.
மேலும், மனுவை விசாரிப்பதற்குப் போதுமான வழக்குக் காரணம் மனுதார்களால் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான அதிகுற்றப்பத்திரத்தைத் தொடராதமைக்கான காரணங்கள் உட்பட, சட்டமா அதிபரினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு இரகசிய அறிக்கைகளை பரிசீலித்த நீதிமன்றம், அவருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என்றும் மனுவை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்வதாகவும் தீர்ப்பளித்தது.