மொகான் பீரிசை சர்வதேச சட்ட ஆணைக்குழு நிராகரிக்க வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் உரியவாறு விசாரணைகளை மேற்கொள்ளத்தவறிய முன்னாள் பிரதம நீதியரசரும் சட்டமா அதிபருமான மொஹான் பீரிஸ், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு இலங்கை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை பெரிதும் அதிருப்தியளிப்பதாக உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள மொஹான் பீரிஸ், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் 2008 – 2011 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சட்டமா அதிபராகவும் 2013 ஆம் ஆண்டில் பிரதம நீதியரசராகவும் பதவிவகித்தவர் என்ற அடிப்படையில் பொறுப்புக்கூறலையும் நீதியையும் நிலைநாட்டத்தவறிய மொஹான் பீரிஸ், இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட்டமை தொடர்பில் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டம் ஏற்கனவே அதன் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் ஐ.நாவின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு பிலிப்பைன்ஸ் சார்பில் ஹரி ரொக் மற்றும் இலங்கையின் சார்பில் மொஹான் பீரிஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டமையை நிராகரிக்குமாறு வலியுறுத்தி சமூகநீதி மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸைத் தளமாகக்கொண்டியங்கும் அமைப்பொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றுக்கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே யஸ்மின் சூக்கா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பின்பற்றப்படும் சட்டத்தை இயற்றுவதற்கான பங்களிப்பை வழங்கிய, உலகநாடுகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்கின்ற ஓர் கட்டமைப்பாக சர்வதேச சட்ட ஆணைக்குழு இருக்கின்றது.

அத்தகைய கட்டமைப்பிற்கு ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் தமக்குரிய மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றத்தவறிய நாடுகள் தமது பிரதிநிதிகளைப் பரிந்துரை செய்வதற்கு அனுமதிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையினால் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரையை ஆணைக்குழு நிராகரிக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

இலங்கை அரசாங்கத்தினால் கடந்த 2009 ஆம் ஆண்டு மேமாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு யுத்தம் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டபோதிலும், அக்காலப்பகுதியில் மிகமோசமான போர்க்குற்றங்கள் இடம்பெற்றதுடன் அவை தொடர்பில் பல்வேறு சர்வதேச தரப்புக்களாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை, வைத்தியசாலைகளை இலக்குவைத்துக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை, வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் சட்டத்திற்கு முரணான படுகொலைகள் என்பன இதில் அடங்குவதுடன் அவைகுறித்து இலங்கை அரசாங்கத்தினால் உரியவாறு விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆட்சியமாற்றத்தைத் தொடர்ந்து புதிய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியதுடன் அதற்கமைவாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்றவற்றை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுத்தது. ஆனால் மீண்டும் ஆட்சிபீடமேறிய ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்திலிருந்து விலகியது. அதனையடுத்து இலங்கையின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் கடுமையான கரிசனையை வெளிப்படு;த்தும் அறிக்கையொன்று கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டது.

அதுமாத்திரமன்றி இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்தல், ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் அறிக்கைப்படுத்தல் ஆகியவற்றை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச சட்ட ஆணைக்குழுவிற்கு இலங்கை சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மொஹான் பீரிஸ் தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் வதிவிடப்பிரதிநிதியாக பணியாற்றிவருகின்றார்.

இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதன் பின்னருமான (2008 – 2011) காலப்பகுதியில் சட்டமா அதிபராகப் பதவிவகித்த மொஹான் பீரிஸ், இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமானதும் நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுத்திருக்கவேண்டும். அதுமாத்திரமன்றி மொஹான் பீரிஸினால் தயாரிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு செயற்திட்டமும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்ததுடன் அது வலுவான மனித உரிமைகள்சார் கரிசனைகளையும் தோற்றுவித்திருந்தது. மொஹான் பீரிஸ் தொடர்பில் இலங்கையின் அரசியல்வாதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச சட்டத்தரணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படும் விமர்சனங்களை அடிப்படையாகக்கொண்டு அவரை தமது ஆணைக்குழுவிற்குள் உள்வாங்குவது பொருத்தமானதா? இல்லையா? என்பதை சர்வதேச சட்ட ஆணைக்குழு தீர்மானிக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!