“25 கார்கள், 80 கொள்ளையர்கள்” – அமெரிக்காவில் அரங்கேறிய மாபெரும் கொள்ளை சம்பவம்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில், நார்ட்ஸ்ட்ரோம் என்ற பல்பொருள் அங்காடி உள்ளது. வால்நட் கிரீக் பகுதியில் உள்ள அந்த கடையில் கடந்த சனிக்கிழமை இரவு 25 கார்களில் முகமூடி அணிந்த 80 நபர்கள் வந்துள்ளனர்.

கைகளில் ஆயுதங்களுடன் நார்ட்ஸ்ட்ரோம் அங்காடிக்குள் நுழைந்த அவர்கள், கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்தனர். இதனை தடுக்க முயன்ற 2 பேரை தாக்கினார்கள். ஒருவர் முகத்தில் மிளகு ஸ்பிரே அடிக்கப்பட்டது. காயமடைந்த மூவருக்கும் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் காரில் தப்பி சென்றனர். அப்போது 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. இதுதொடா்பாக என்பிசி நிருபர், ஜோடி ஹெர்னாண்டஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முகமூடி அணிந்த நபர்கள் கைகளில் பை, பெட்டி போன்றவற்றுடன் தப்பிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து கடைக்காரர்கள், உடனடியாக தங்கள் கடைகளை பூட்டிக்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் நிகழ்வதற்கு ஒருநாள் முன்பாக சான்பிரான்சிஸ்கோவின் யூனியன் சதுக்கம் பகுதியில் உள்ள ஏராளமான கடைகளுக்குள் இதேபோல் கும்பல் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!