25 வீதமான தனியார் பேரூந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது

நாட்டில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் 25 வீதமான தனியார் பேரூந்துகளில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது என சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

பேரூந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தும் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் மறுபுறத்தில் தரம் குறைந்த எரிபொருளை அரசாங்கம் இறக்குமதி செய்வதாக குற்றம் சுமத்துகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு லீற்றர் டீசல் 111 ரூபாவிற்கு விற்பனை செய்பய்படுவதுடன் ஒரு லீற்றர் மண்ணெண்ணை 77 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.
இந்த விலை வித்தியாசம் காரணமாக அநேகமான தனியார் பேரூந்துகள் மண்ணெண்ணையைப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன, அரசாங்கம் தரம் குறைந்த எரிபொருள் இறக்குமதி செய்வதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இறக்குமதி செய்யும் அதே எரிபொருட்களையே தனியாரும் பயன்படுத்துகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக அரசாங்க பேரூந்துகள், ரயில்கள், மின் உற்பத்தி ஜெனரேட்டர்கள் என்பனவற்றுக்கு பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார். எனவே, டீசலை பயன்படுத்துவதன் மூலம் தனியார் பேரூந்து என்ஜின்கள் மட்டும் பழுதடையக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டீசல் பயன்படுத்த வேண்டிய என்ஜின்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மண்ணெண்ணை பயன்படுத்தினால் அவை பழுதடையும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!