நடமாட தடை விதிக்கப்படுமா? வெளியாகியுள்ள அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகை காலத்தில் மக்கள் நடமாட்ட தடை விதிப்பதற்கு பதிலாக மாற்றுவழி ஊடாக நிலைமையை முகாமைத்துவப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நடமாட்டத் தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சுகாதார வழிகாட்டுதல்களை மீறி கொழும்பில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் இரவு விடுதிகள், வீடுகளில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்த வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது கோவிட் தொற்று பரவி வரும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறான விருந்துகள் நடத்தப்படுமாயின் 011-2676161 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கொழும்பு நகரில் சுகாதார விதிகளை மீறும் நபர்களை துரித ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாதவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!