யாழ்ப்பாணத்தில் மீண்டும் மலேரியா!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின் மலேரியா நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவருக்கே மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    
வெளிநாடு சென்று வருபவர்களால் மீண்டும் மலேரியா தொற்று ஏற்படும் அபாயம் யாழ்ப்பாண குடாநாட்டில் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பிராந்திய மலேரியாத் தடுப்பு வைத்திய அதிகாரி மருத்துவர் அ.ஜெயக்குமாரன் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்கா நாட்டிலிருந்து வருகைதந்த ஒருவர் நோய் வாய்ப்பட்டு யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு மலேரியா தொற்று உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர் வெளிநாட்டிலிருந்து வந்ததன் காரணமாகவே அவருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இலங்கையில் நீண்டகாலமாக மலேரியா நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

எனினும் வெளிநாடுகளுக்குச் சென்று வருவோரால் மீண்டும் மலேரியா தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே யாழ். மாவட்டத்தில் வெளி நாடுகளுக்குச் செல்வோர் தமது பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணி மனையினருடன் தொடர்பு கொண்டு தமக்குரிய மலேரியா தடுப்பு பெற்றுச் சென்றுவருவது மிகவும் உகந்தது.
அதேபோல் இந்த வருட இறுதியில் பெருமளவு ஐயப்பன் பக்தர்கள் இந்தியாவுக்குச் செல்லவுள்ள நிலையில், இந்தியா செல்லவுள்ள ஐயப்பன் பக்தர்கள் அனைவரும் தவறாது தமது பிரிவில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினருடன் தொடர்புகொண்டு மலேரியா தடுப்பு மருந்தினைப் பெற்று தமது பயணங்களை மேற்கொள்வது உகந்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!