யாழ். மாநகர சபையில் கூட்டமைப்பின் நிலைப்பாடு – சம்பந்தன் அதிருப்தி!

உள்ளூராட்சி சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும் எனவும், அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் செயற்படுவதே அவசியமானதாகும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
    
யாழ்ப்பாணம் மாநகர சபையின் வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எடுத்த முடிவு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் தமிழ் ஊடகங்கள் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

யாழ். மாநகர சபையில் மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் சமர்ப்பித்திருந்த 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டதுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்து வாக்களிப்பது தொடர்பில் எனக்கு எதுவும் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. இந்தத் தீர்மானம் யாழ்ப்பாணத்தில் இருந்தவர்களால் எடுக்கப்பட்டிருந்தது. எனவே, இது பற்றி கருத்துக்கூற நான் விரும்பவில்லை.

ஆனால், எனது பொதுவான கருத்து என்னவெனில், உள்ளூராட்சி சபைக்கோ அல்லது மாகாண சபைக்கோ அல்லது நாடாளுமன்றத்துக்கோ தெரிவு செய்யப்படுபவர்கள் மக்களின் நன்மை கருதிச் செயற்பட வேண்டும். அரசியலுக்கு அப்பால் மக்களுக்கு நன்மையளிக்கும் விதத்தில் செயற்படுவதே அவசியமானதாகும்.

அதனை அடிப்படையாகக் கொண்டு சில முக்கியமான தீர்மானங்களை அவசியமான நேரங்களில் எடுக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு.

சகல விடயங்களிலும் அரசியல் நோக்கத்துடன் செயற்பட்டால் எதனையுமே எம்மால் நிறைவேற்ற முடியாமல், அமுல்படுத்த முடியாமல், ஒரு முன்னேற்றத்தை அடைய முடியாமல் போய்விடும். அதனைச் சகலரும் மனதில் வைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!