உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மைகளை ஜனாதிபதி தடுக்கிறாரா? அருட் தந்தை சந்தேகம்

இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மை வெளியாவதை, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தடுக்கின்றதா? என அருட்தந்தை சிறில் காமினி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தாக்குதல்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படுமாயின் உண்மை வெளியாகும்.

எனினும் அந்த உண்மையை மறைக்கும் நோக்கிலேயே குறித்த பரிந்துரைகள் இதுவரை செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அருட்தந்தை சிறில் காமினி இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மைகள் வெளியாக்கப்படவில்லை. அது மறைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதலுடன் தொடா்புபட்டதன் காரணமாகவா? அந்த உண்மைகள் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என கேட்கத் தோன்றுகின்றது.

ஜனாதிபதிக்கோ, அரசாங்கத்திற்கோ இந்த தாக்குதலுடன் எவ்வித தொடர்பும் இல்லையெனின் உண்மையை ஏன் வெளிப்படுத்தாமல் இருக்கின்றீர்கள். அதனை ஏன் மறைக்கின்றீர்கள். இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த இரண்டு ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

அதில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பொறுப்புக்கூற வேண்டியவர்களின் பெயர்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன. மில்லியன் கணக்கான ரூபாய் மக்கள் பணத்தை செலவழித்து, காலத்தை செலவழித்து இந்த ஆணைக்குழுக்கள் நடத்திச் செல்லப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை செயற்படுத்தாவிடின் இந்த பணம் செலவழிக்கப்பட்ட பணம் குறித்து அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

அந்த பரிந்துரைகளை செயற்படுத்துமாறும் அல்லது மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த விசாரணைகளை மேற்கொள்ள குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு அனுமதி வழங்காத நிலையில், பணம் செலவு செய்யப்பட்ட விடயம் குறித்து அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.

ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படுமாயின் உண்மை வெளிவந்திருக்கும். எனினும் அந்த உண்மையை மறைப்பதற்காகவா ஜனாதிபதி இந்த பரிந்துரைகளை செயற்படுத்தாது செயற்படுகின்றார்”

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!