ஜே.வி.பியுடன் கூட்டணி அமைக்க பேச்சு நடத்தும் ஆளும் தரப்பினர்

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தி கூட்டணியுடன் விமல் வீரவங்ச மற்றும் குமார் குணரட்னம் ஆகியோர் இணைய முடியும் என அந்த முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

எனினும் தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு இணங்குவார்கள் என்றால், அவர்கள் கூட்டணியில் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் போராட்டத்தில் இணைந்துக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜயதிஸ்ஸ இதனை குறிப்பிட்டுள்ளார்.

யுகதனவி மின் உற்பத்தி நிலையம் மற்றும் எரிவாயு விநியோகத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கியமைக்கு எதிராக விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் நீதிமன்றத்திற்கு சென்றதை நான் வரவேற்கின்றேன்.

அதேபோல், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைவது தொடர்பாக பேசியமைக்கு தயாசிறி ஜயசேகரவுக்கு நன்றி கூறுகிறேன்.

இதனடிப்படையில், தேசிய மக்கள் சக்தி முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு இணங்கினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு, மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்து செயற்பட முடியும்.
ஊழல், மோசடிகளுக்கு எதிராக அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு போராடும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் ஏற்கனவே மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இவர்களில் உதவியை தீர்மானகரமான சந்தர்ப்பத்தில் நாங்கள் பெற்றுக்கொள்வோம்.
இதனடிப்படையில், தேசிய மக்கள் சக்தியின் நிபந்தனையை ஏற்கும் அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் மக்கள் சார்பான அரசாங்கத்தை அமைக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுக்கும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!