புதிய அரசியலமைப்பை குழப்புகிறது மொட்டு!

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் முயற்சிகளில் ஜனாதிபதியின் முழுமையான ஈடுபாடு இருந்தாலும் கூட அரசாங்கத்தின் பிரதான கட்சியே அதனை தடுக்கும் விதத்தில் செயற்பட்டுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ஒரு வாக்குறுதியை கொடுக்கும் வேளையில், அரசாங்கத்தின் பிரதான கட்சி அதனை நிராகரிப்பது அரசியல் ரீதியிலான குழப்பத்தை ஏற்படுத்துகின்றது என அமைச்சர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.
    
புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி என்னவானது என்ற கேள்விக்கு ஜனாதிபதி பதில் கூற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாட்டின் நெருக்கடி நிலைமையில் அரசாங்கம் எடுக்கும் சில முக்கிய தீர்மானங்கள் குறித்து எம்மிடத்தில் இணக்கப்பாடு இல்லை. அமைச்சரவையிலும், தனிப்பட்ட கலந்துரையாடல்களின் போதும் நாம் இவற்றை சுட்டிக்காட்டியுள்ளோம். எம்மை பொறுத்தவரையில் அமைச்சுப்பதவிகளை விடவும், நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளே பெரியது.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்கவுமே அரசாங்கத்திற்குள்ளும், அமைச்சரவைக்குள்ளும் இருந்துகொண்டு போராடிக்கொண்டுள்ளோம்.

மேலும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க விடயங்களை பொறுத்தவரை, அரசாங்கத்திற்குள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் மட்டுமே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் இணக்கம் தெரிவிக்காது, அதனை ஏற்றுக்கொள்ளாத விதத்தில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அவர்களின் யோசனையும் முன்வைக்கப்படவில்லை.

நிபுணர்கள் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். நிதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் கட்சியின் செயலாளர் ஆகியோர் இந்த குழுவில் கருத்துக்களை முன்வைத்தனர்.

மறுபுறம் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவேன் எனவும், அதனை ஒரு வருட காலத்திற்குள் பூர்த்தி செய்வேன் எனவும் ஜனாதிபதி எமக்கும், நாட்டிற்கும் வாக்குறுதியளித்துள்ளார். நீதி அமைச்சரின் ஊடாக பாராளுமன்றத்திற்கும் அவர் வாக்குறுதியளித்துள்ளார்.
எனவே இது குறித்து ஜனாதிபதி அவரது தரப்பு காரணிகளையும், பதிலையும் தெரிவிக்க வேண்டும். அதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஒரு வாக்குறுதியை கொடுக்கும் வேளையில், அரசாங்கத்தின் பிரதான கட்சி அதனை நிராகரிப்பது அரசியல் ரீதியிலான குழப்பத்தை ஏற்படுத்துகின்றது.

ஆகவே ஜனாதிபதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு என்னவானது என்பதற்கு அவர் சமூகத்திற்கு பதில் தெரிவிக்க வேண்டும். தாம் கொடுத்த வாக்குறுதிக்கு அமைய ஒருவருட காலமும் நிறைவடையப்போகின்றது. ஆனால் அரசியல் அமைப்பு வரைபொன்றை நாம் இன்னமும் அவதானிக்கவில்லை. அமைச்சரவையிலும் இது குறித்து பேசப்படவில்லை.

எனவே ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது வெளிப்படுகின்றது. எனினும் ஜனாதிபதி இது குறித்து தொடர்ச்சியாக அக்கறை செலுத்தி வருகின்றார். அவருக்கு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் நோக்கம் உள்ளது.
ஆனால் வேறு விதத்தில் சில தடைகள் உள்ளன. எவ்வாறு இருப்பினும் இது ஜனாதிபதி எமக்கும், நாட்டு மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை மீறும் செயற்பாடாகும். அதேபோல் அரசாங்கத்தின் பிரதான கட்சியின் செயற்பாடுகள் காரணமாக அவதானிக்க முடிவது என்னவென்றால், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக இருப்பது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியே என்பது வெளிப்படுகின்றது என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!