18 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுற்றிவளைப்போம்!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் புதிதாக கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்படாகும். எதிர்வரும் 18 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுற்றிவளைப்போம் என துறைமுகம்,பெற்றோலியம்,மின்சாரம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்தார்.
    
யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கம் ஒப்பந்தம் திருட்டுத்தனமான முறையில் கைச்சாத்திடப்பட்டதால் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்துகிறோம் என மக்கள் மத்தியில் தேசப்பற்றாளரை போன்று கருத்துரைத்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அதே திருட்டுத்தன்மான செயற்பாட்டை முனனெடுத்துள்ளார்.

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ள புதிய ஒப்பந்தம் நாட்டை காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும்.இந்த ஒப்பந்தத்தினால் இலங்கைக்கு ஒரு டொலர் கூட கிடைக்கப் பெறாது.

500 மில்லியன் டொலர் கடன் அடிப்படையில் கிடைக்கப் பெறுகிறது.அதனை வட்டியும், முதலுமாக மீள செலுத்த வேண்டும். பல பில்லியன் பெறுமதியான திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் மீண்டும் 50 வருட காலத்திற்கு இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தம் எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் நிச்சயம் பாராளுமன்றத்தை சுற்றிவளைப்போம். இன்று முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம்.

அரசாங்கத்தின் தவறான பொருளாதார முகாமைத்துவத்தினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி நிலைமையை சர்வதேச நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
தேசிய வளங்களை பணயம் வைத்து அரசாங்கம் அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்கிறது.தேசிய வளங்களை பாதுகாக்க தொடர்ப போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!