கோட்டாபயவின் அதிரடியால் வாய்மூடி மௌனித்த அமைச்சர்கள்!

அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakara), விமல் வீரவங்ச (Wimal Weeravansa) மற்றும் உதய கம்மன்பில (Udaya Gammanpila)ஆகியோர் தலைமையில் உருவாக்கப்பட்ட 11 கட்சிகளை கொண்ட மாற்று அணியினர், எதனையும் கூறவும் செய்யவும் முடியாத நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதி, முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்பாக எடுத்த நடவடிக்கையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் இணைந்து உருவாக்கிய மாற்று அணியின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), வருட ஆரம்பத்திலேயே சுசில் பிரேமஜயந்தவை (Susil Premajayantha) ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார்.

அரசாங்கத்திற்குள் இருந்துகொண்ட அரசாங்கத்தை விமர்சிக்க முடியாது எனவும் அப்படியான தேவை இருப்பவர்கள் எதிர்க்கட்சிக்கு சென்று அதனை செய்ய முடியும் என்ற செய்தியை ஜனாதிபதி இதன் மூலம் ஆளும் கட்சியினருக்கு வழங்கியிருந்தார்.

சுசில் பிரேமஜயந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அரசாங்கத்திற்குள் இருந்து அரசாங்கத்தை விமர்சித்து வந்தவர்கள் தற்போது வாய் மூடி மௌனிகளாக இருந்து வருகின்றனர்.
சுசில் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து, 11 கட்சிகளை கொண்ட அணியினர் அரசாங்கத்தை விமர்சிக்கும் வகையிலான கருத்துக்கள் எதனையும் இதுவரை வெளியிடவில்லை.

பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்காத, ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மாத்திரம், ஜனாதிபதியின் சேதனப் பசளை கொள்கையை விமர்சித்து இருந்தார்.

11 கட்சிகள் கொண்ட அணியில் இருக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தில் இருந்து விலக தேவையான பின்னணியை தற்போது உருவாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!