11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் – கரன்னகொடவின் மனு ஏப்ரலில் விசாரணை!

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில், மாணவர்கள் ஐவர் உட்பட 11 இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக தம்மை பெயரிட்டமைக்கு எதிராக, வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு அழைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று தீர்மானித்தது.
    
இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளை இடைநிறுத்துமாறு அறிவித்து அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

தன்னை பிரதிவாதியாக பெயரிடும் தீர்மானம் ஆதாரமற்றது என்றும் அதனை இரத்து செய்யும் நீதிப் பேராணை கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரியுள்ளார். 2008ஆம் ஆண்டு, தெஹிவளையில் வைத்து ரஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், திலகேஷ்வரம் ராமலிங்கம், மொஹம்மட் நிலான், மொஹம்மட் சாஜித் ஆகிய மாணவர்கள் கடத்தப்பட்டிருந்தனர்.

அதேஆண்டு, கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த கஸ்தூரி ஆரச்சிலாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன், ரொஷான் லியோன், கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த அன்டனி கஸ்தூரி ஆரச்சி, திருகோணமலையைச் சேர்ந்த கனகராஜா ஜெகன், தெஹிவளையைச் சேர்ந்த மொஹம்மட் அலி அன்வர் ஆகியோரும் கொழும்பில் கடத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!