எரிபொருள், மின்சார விலைகளை தீர்மானிக்கும் அதிகாரம் இந்தியாவிடம்!

இலங்கையில் எரிபொருள் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் தற்போது இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு (ஐஓசி) இருப்பதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கத் தலைவர் ஆனந்த பாலித தெரிவித்தார்.
    
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

இலங்கை மின்சார சபை, ஐஓசியிடம் எரிபொருள் கோரியதன் விளைவாக இலங்கையில் மின்சார கட்டணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஐஓசி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இவை அனைத்தும் திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையை எரிசக்தி அமைச்சர் இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்கியதன் முடிவுகள் என குறிப்பிட்டார்.

எரிசக்தி அமைச்சரின் ஒப்பந்தங்களால், அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களின் கட்டுப்பாட்டை நாடு இழக்க வழிவகுக்கும் என்று தெரிவித்த அவர், எரிபொருள் விலையை கட்டுப்படுத்தவும், நிர்ணயிக்கவும், மின் கட்டணத்தை நிர்ணயிக்கவும் இந்திய நிறுவனத்துக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளோம் என்றார்.

ஐஓசியின் எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து ஆரம்ப எச்சரிக்கைகள் சரியானவை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் மூன்று தடவைகள் ஐ.ஓ.சி எரிபொருட்களின் விலையை உயர்த்திய போது, எரிபொருளின் விலைகளை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை தாங்கள் எட்டவில்லை என அமைச்சரும் ஏனைய அதிகாரிகளும் கூறியதாகவும் பாலித சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!