“எல்லையிலாவது விட்டு விடுங்கள்” – உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர் கதறல்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியை சேர்ந்தவர் ஆரோக்கிய செபஸ்டியன் ராஜ் (வயது 21). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கெர்சன் நகரில் ‘மரைன் என்ஜினீயரிங்’ 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

இதனால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ஏவுகணை தாக்குதல் நடந்து வருகிறது. பல மாடி கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள் தரை மட்டமாகி வருவதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். பாதுகாப்பான இடம் தேடியும், உணவு தேடியும் அலையும் நிலை இருந்து வருகிறது.

    
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் போர் நடைபெறும் இடத்தில் சிக்கியுள்ள மாணர் ஆரோக்கிய செபஸ்டின்ராஜ், கண்ணீர் மல்க உருக்கமான வீடியோ ஒன்றை வெளயிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘ உக்ரைனின் கெர்சன் நகரில் 3 மாணவர்கள் உள்பட 5 பேர் சிக்கியுள்ளோம். எங்கு பார்த்தாலும் குண்டு போடுகிறார்கள். கட்டிடங்கள் இடிந்து விழுந்து தீப்பிடித்து எரிகிறது. நாலா புறமும் மக்கள், உயிரை காப்பாற்ற ஓடி ஓளியும் நிலை உள்ளது. நாங்கள் உதவிகள் கேட்டும் யாரும் உதவவில்லை.

கெர்சன் நகர், தற்போது ரஷியாவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. இங்கிருந்து யாரும் எல்லையை தாண்டி செல்ல முடியவில்லை. இதுபற்றி மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு கடிதம் மூலம் தகவல் கொடுத்தோம். இதை பார்த்து மத்திய- மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களை மீட்க வேண்டும்.

இந்த பகுதியில் இருந்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நாட்டின் எல்லையான ஒடேசா நகருக்கு அனுப்பி வைத்தால் கூட, நாங்கள் பத்திரமாக உயிருடன் திரும்ப முடியும்’ என்று தெரிவித்துள்ளார். தற்போது உக்ரைனில் சிக்கியுள்ள ஓசூர் மாணவரின் வீடியோ , சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!