கனடாவில் கோர விபத்து: 5 இந்தியர்கள் பலி!

கனடாவின் பிரதான சாலை 401ல் ஏற்பட்ட கோர விபத்தில் சிக்கி மரணமடைந்த ஐவரை ஒன்ராறியோ பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை அதிகாலையில் பெல்வில் மற்றும் ட்ரெண்டன் இடையே பிரதான சாலை 401ல் குறித்த கோர விபத்து நடந்துள்ளது.

Aikins சாலை மற்றும் Saint Hilaire சாலைக்கு இடையிலான பிரதான சாலையில் அதிகாலை 3:45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
    
டிராக்டர்-டிரெய்லர் ஒன்று பயணிகள் வேன் ஆகியவை நேருக்கு நேர் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் குறித்த வேனில் பயணம் செய்த ஐவர் சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளதாகவும், இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் டிராக்டர்-டிரெய்லரின் சாரதி காயங்களின்றி தப்பியதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் ஒன்ராறியோ மாகாண பொலிசார் வெளியிட்ட தகவலில்,

விபத்தில் சிக்கியவர்கள் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் எனவும், Jaspinder Singh(21), Karanpal Singh(22), Mohit Chouhan(23), Pawan Kumar(23), மற்றும் Harpreet Singh(24) ஆகியோர் சம்பவயிடத்திலேயே பலியானதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது எவரும் உதவ முன்வராத போதும் பொலிஸ் தரப்பு தங்கள் பணியை முன்னெடுத்துள்ளது எனவும், இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதுவரை கைது நடவடிக்கைகள் ஏதும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!