அரசாங்கத்தினால் நாட்டு மக்களுக்கு நிவாரணம்?

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று மேலும் குறைவடைந்துள்ளது.
இதன்படி, பிரேண்ட் சந்தை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை தற்போது 98 அமெரிக்க டொலராக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று நேற்றைய தினம் 100 டொலராக காணப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.   

இதனிடையே, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை கணிசமான அளவு குறைவடைந்துள்ள நிலையில், அதன் பயனை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென  ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
 
ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம்  ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 140 அமெரிக்க டொலராக அதிகரித்த நிலையில், குறித்த தினத்திற்கு 35 நாட்களுக்கு முன்னதாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் இருப்பையும் சேர்த்து அரசாங்கம் விலை  அதிகரிப்பை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி, சர்வதேச சந்தை நிலைமைக்கு ஏற்ப எரிபொருளின் விலையினை அதிகரித்த  அரசாங்கம், தற்போது  மக்களுக்கு நிவாரணத்தினை வழங்க வேண்டுமெனவும்  அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், நாட்டு மக்களுக்கு இன்று இரவு உரையாற்றவுள்ள ஜனாதிபதி எரிபொருளுக்கான விலையினை குறைப்பதற்கான உத்தரவை பிறப்பிப்பாரானால் பொருத்தமானதாக இருக்குமெனவும் ஐக்கிய ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம்  ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித  மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!