தேசிய சொத்துக்களை விற்கவில்லை!

இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையில் சம்பிரதாய பூர்வமான நட்புறவைப் பேணுவதற்கும் , பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் மாத்திரமே இந்து சமுத்திரத்தின் கடல் பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது. மாறாக தேசிய சொத்துக்களை விற்பதற்காக அல்ல என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
    
இந்து சமுத்திரத்தின் கடல் பாதுகாப்பு குறித்து இலங்கை மற்றும் இந்தியா இடையே கைச்சாத்திடப்படவுள்ள 3 உடன்படிக்கைகள் தொடர்பில் உடனடியாக மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் தெரியப்படுத்துமாறு எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

‘த இந்துஸ்தான்’ பத்திரிகை இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையிலேயே இது தொடர்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் ,
இவ்வாறான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாயின் அது தொடர்பில் நிச்சயம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும். இவை சம்பிரதாய பூர்வமாக இரு நாடுகளுக்குமிடையில் நட்புறவைப் பேணுவதற்கும் , பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் மாத்திரமே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். அதனை விடுத்து தேசிய சொத்துக்களை விற்பது தொடர்பில் எந்தவொரு பிரச்சினையும் இதனால் ஏற்படாது.

மாறாக அவ்வாறான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு நிச்சயம் அறிவிக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!