மின்தடை காலம் மேலும் நீடிப்பு – அதிர்ச்சியில் மக்கள்….?

நாட்டில்  அமுல்படுத்தப்படும் மின் தடை காலப்பகுதியினை மேலும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி குறித்த காலப்பகுதியினை மேலும் 3 மணித்தியாலங்களாக அதிகரிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர்  ரஞ்சித் இந்துநுவர தெரிவித்துள்ளார்.

நாட்டில் மிதக்கும் மின் உற்பத்தி நிலையங்களில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு   போதுமான எரிபொருள் மாத்திரமே இருப்பில் காணப்படுவதாக அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இலங்கை மின்சார சபையின் மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்

இதனிடையே அரச உத்தியோகத்தர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமை  அமுல்படுத்தப்படுமாயின்  நாளாந்த  மின்தடை அமுலாகும் காலப்பகுதியினை குறைப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று இதனை  தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில்  இன்று  10 மணித்தியால மின்தடை அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மின்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறு மின்தடை அமுல்படுத்தப்படாத பகுதிகளில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம், நாடாளுமன்றம் மற்றும்  நாடளுமன்ற உறுப்பினர்களின் தங்குமிடமான மாதிவெல ஆகிய பகுதிகளிலும் மின்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என தகவல்கள்   தெரிவிக்கின்றன
மேலும்  நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பத்து மணித்தியால மின்விநியோக தடையினை அமுல்ப்படுத்த இலங்கை மின்சார சபை நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய A முதல் L வரையான 12 வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 
மேலும்  P  முதல் W  வரையான 8 வலயங்களில்  காலை 08.30 முதல் மாலை 06.30 வரையான காலப்பகுதிக்குள் 5 மணித்தியாலங்கள் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 06.30 முதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள்  ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!