பாதுகாப்புச் செயலாளரின் மற்றொரு நாடகம்!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ணவினால் வெளியிடப்பட்ட கருத்தானது மற்றுமொரு நாடகமாகும். இது சிறுபிள்ளைத் தனமான விடயமாகும் என கத்தோலிக்கத் திருச்சபையின் ஞானர்த்த பிரதீப்பய பத்திரிகையின் ஆசிரியரான அருட் தந்தை சிறில் காமினி அடிகள் தெரிவித்தார்.
    
நாட்டின் பாதுகாபுச் செயலாளரான கமல் குணரட்ண பொதுமக்களின் வரி மூலம் சம்பளம் பெறும் அரச சேவையளர். பொது மக்களை பாதுகாப்பதே அவரின் வேலையே தவிர, அரசியல் தலைவர் அல்ல.

கடந்த 12 ஆம் திகதியன்று அவரின் தலைமையில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது, பாதுகாப்புச் செயலாளரிடம் கத்தோலிக்க திருச்சபை 20 கேள்விகளை முன்வைத்துள்துடன், அந்த 20 கேள்விகளுக்குமான பதிலை கத்தோலிக்க திருச்சபை எதிர்பார்த்திருப்பதாகவும் அருட் தந்தை சிறில் காமினி குறிப்பிட்டார்.

“உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும் இதுவரை குற்றவாளி யார் என்பதையும், அதற்கு பின்புலமாக யார் இருந்தார்கள் என்பதையும் கண்டுபிடிப்பதற்கு பாதுகாப்புத் துறை தவறியுள்ளது. உண்மையில், தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக வரிசைகளிலும், போராட்டங்களிலும் ஈடுபட்டு வருவதால், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடக சந்திப்புக்களை நடத்தாமல் இருந்து வந்தோம்.

எனினும், நாட்டின் பாதுகாப்புச் செயலாளரான கமல் குணரட்ண தலைமையில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரட்ண, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் ஜகத் டயஸ் ஆகி‍யோரின் பங்குபற்றுதலுடன் கடந்த செவ்வாயன்று (12) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான ஊடக சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது. இதில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அவரிடம் நாம் 20 கேள்விகளை முன்வைக்கிறோம். அவை தொடர்பில் தெளிவான பதிலை எமக்கு தருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!