ஜெருசலேமில் ஈஸ்டர் ஞாயிறன்று வெடித்த கலவரம்!

ஈஸ்டர் ஞாயிறன்று ஜெருசலேம் புனித தலத்தில் இஸ்ரேலிய பொலிஸாருக்கும் பாலஸ்தீனிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 17 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெருசலேமில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஒரு வருடத்திற்கு முன்னர் நடந்த வன்முறை சம்பவமானது 11 நாட்கள் நீடித்த காசா போராக வெடித்தது.
    
அல்-அக்ஸா மசூதியானது இஸ்லாமியர்களுக்கு மூன்றாவது புனிதமான பகுதியாகும். ஆனால் குறித்த பகுதியை யூதர்களும் புனிதத்தலமாக கொண்டாடி வருகின்றனர். இருவரும் தங்களுக்கான புனிதமான இடம் என உரிமை கொண்டாடுவதால் தொடர்ந்து அமைதியின்மை காணப்படுக்கிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டர் பண்டிகையும், இஸ்லாமியர்களுக்கு ரமதான் மாதம் மட்டுமின்றி யூதர்களுக்கு ஒருவார காலம் நீளும் முக்கிய பண்டிகையும் ஒரு சேர அமைந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஜெருசலேமுக்கு வருகை தந்துள்ளனர்.

இஸ்ரேல் பொலிசார் பாலஸ்தீனியர்களை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மக்களை குற்றஞ்சாட்டியுள்ளனர். புனித தலத்திற்கு யூதர்களின் வழக்கமான வருகையை எளிதாக்குவதற்காக அவர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

ஆனால் வன்முறையை எதிர்பார்த்து பாலஸ்தீனியர்கள் கற்களை குவித்து தடுப்புகளை அமைத்துள்ளதாக பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். பாலஸ்தீனியர்கள் மசூதி வளாகத்திற்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பாலஸ்தீனியர்கள் பழைய நகரத்திற்கு வெளியே பேருந்துகள் மீது கற்களை வீசியதாக காவல்துறை கூறியுள்ளது.

இதனிடையே, பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்றதாக அவசர மருத்துவ உதவிக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
17 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!