திவாலாகி விட்டது இலங்கை! நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் சஜித்

இலங்கை தற்போதே வெனிசூலா மற்றும் லெபானான் போன்ற திவாலான நாடாக மாறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிதியமைச்சர் அலி சப்ரி உரையாற்றிய பின்னர் உரை நிகழ்த்திய சஜித் பிரேமதாச, நாட்டின் தலைவரால் எடுக்கப்பட்ட பைத்தியக்கார தீர்மானம் காரணமாக இன்றைய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பண்டோரா மற்றும் ஏனைய இடங்களில் வைப்புச் செய்யப்பட்டுள்ள டொலர்களை நாட்டுக்கு கொண்டு வந்தால் நாட்டில் மீண்டும் டொலர்கள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் தவறுகளை ஏற்றுக்கொண்டமையை வரவேற்ற சஜித் பிரேமதாச, அமைச்சரவையில் இருந்துகொண்டு அமைச்சரவையில் இடம்பெற்ற தவறுகளை ஏன் தட்டிக்கேட்கவில்லை என்று சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

வறுமை ஒழிப்பு திட்டத்தை விமர்ச்சிக்கவேண்டாம் என்று குறிப்பிட்ட அவர், இந்த திட்டங்களை நடப்பு அரசாங்கமே அரசியலுக்காக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தினார்.

அரச சேவையாளர்களுக்கு வழங்கப்பட்ட வேதன உயர்வு பிழையானது என்று நிதியமைச்சர் குறிப்பிட்டதை கண்டித்த அவர், அதன் காரணமாக நாட்டில் நிதி பிரச்சினை ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையில் கடந்த 30 மாத காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளில் இருந்து வெளியேறி சர்வதேசத்துடன் பேசுவதற்கான பிரயத்தனத்துக்காக தாம் நிதியமைச்சருக்கு நன்றி கூறுவதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இலங்கைக்கு உதவியளிப்பதற்கு முன்னர் இந்தியா, தம்மிடம் உதவியளிப்பதா? இல்லையா? என்பதை வினவியதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.

அவசரக்கடன் பெறும் வகையில் குறித்த சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதிர்க்கட்சி தயார் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை சர்வதேச உணவுத்திட்டம், மற்றும் ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களுடன் பேசி எதிர்வரும் காலத்தில் எதிர்பார்க்கப்படும் உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்கவேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

நடப்பு ஜனாதிபதியின் கீழ் இந்த நாட்டை கொண்டு செல்லமுடியாது என்று குறிப்பிட்ட அவர், தமது கட்சி சமர்ப்பித்துள்ள இரண்டு நம்பிக்கையில்லா யோசனைகளுக்கு விரைவான திகதியை தருமாறும் பிரதி சபாநாயகர் பதவிக்கு ஒருவரை நியமிக்குமாறும் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் கருத்துரைத்த சபாநாயகர், பிரதி சபாநாயகருக்கான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!