ஆரியகுளத்தை திருத்தியதால் எமக்கு என்ன பயன்?

ஆரியகுளத்தை திருத்தியதால் எமக்கு என்ன பயன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
    
கொக்குவிலில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடந்த ஊடக சந்திப்பின் போது, ஆரியகுளத்தில் வெசாக் கூடுகளை கட்ட அனுமதிக்காவிட்டால் யாழ் மாநகர சபையை கலைக்க நேரிடும் என வடமாகாண ஆளுநர் எச்சரிக்கை விடுத்ததாக வெளியான செய்தி தொடர்பில் ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநரின் கருத்தை நாம் கண்டிக்கின்றோம். அது மிகப் பிழையான கருத்து. யதார்த்தம் என்னவென்றால் இனவெறி கொண்ட ஜனாதிபதி தயவில் இருக்கின்ற ஒருவரின் கருத்துக்கு முண்டு கொடுக்கும் வகையில் தமிழ்தேசியம் பேசிக்கொண்டு சிங்கள தேசியவாதத்திற்கு முண்டு கொடுத்து அவர்கள் நல்ல பிள்ளைக்கு நடிக்க வெளிக்கிட்டு மாட்டுப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கு அருகில் இருக்கின்ற குளத்தைப் புனரமைத்து இருக்க முடியும். அது தமிழ் மக்கள் நடமாடக் கூடிய ஒரு மிக முக்கியமான பகுதியில் உள்ள குளம். அதை செய்யாமல் விட்டுவிட்டு இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் செயற்படும் ஒருவரின் நிதியுதவியுடன் ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது.

நாகவிகாரை பிக்குவின் கோரிக்கைக்கமையவே ஆரியகுளம் புனரமைக்கப்பட்டது. நாக விகாரைக்கு வந்துபோகிறவர்களின் பொழுது போக்கு வசதிக்காகவே அது புனரமைக்கப்பட்டது. அதனை நிறைவேற்றவே ஆளுநர் கேட்கிறார். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனை திருத்தியதால் எமக்கு என்ன பயன்? என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!