அமெரிக்காவில் பயங்கரம்: பள்ளிக்குள் நுழைந்து 14 குழந்தைகளை சுட்டுக்கொன்ற கொடூரன்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் மற்றும் 1 பள்ளி ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மாகாணத்தின் சான் அண்டோனியோவிற்கு மேற்கே 80 மைல் தொலைவில் உள்ள உவால்டே நகரின் ராப் எலிமெண்டரி பள்ளியில் நுழைந்த சால்வடார் ராமோஸ்(18) தனது கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
    
சால்வடார் ராமோஸ்(18) இந்த சரமாறி துப்பாக்கி சூட்டில் இதுவரை குறைந்தபட்சம் 14 குழந்தைகளும் 1 ஆசிரியரும் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக மாநில ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆளுநர் கிரெக் அபோட் செய்தியாளர்களுக்கு வழங்கிய தகவலில், சால்வடார் ராமோஸ் நடத்திய முறையற்ற துப்பாக்கி சூட்டில் 14 குழந்தைகளும் 1 ஆசிரியரும் உயிரிழந்து இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட குற்றவாளியுடன் எதிர்ப்பு தாக்குதல் நடத்திய போது பொலிஸார் அதிகாரி இருவருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சந்தேகிக்கப்படும் குற்றவாளி காவல்துறை அதிகாரிகளால் கொல்லப்பட்டதாக நம்பப்படுவதாகவும், அவர் இந்த பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்படுகிறது எனத் மாநில ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஜனாதிபதி ஜோ பைடனுக்கு விளக்கமளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுகுறித்து அவர் செவ்வாய்கிழமைக்கு பிறகு பேசுவார் என்று வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகை மற்றும் பிற பொது கட்டிடங்களில் அமெரிக்கக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டு இருப்பதாகவும் மற்றொரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!