வேட்பாளராக வந்தவர் தான் மணிவண்ணன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. கட்சி உருவாக்கப்பட்ட பின்னர் ஒரு வேட்பாளராகவே சிலரால் கொண்டு வரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் என அக் கட்சியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.
    
கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், மணிவண்ணன் அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்பாக தெரிவித்த கருத்து தொடர்பிலேயே சுகாஷ் இதனைத் தெரிவித்தார்.
அவருடைய கருத்தை பெரிதாக நாங்கள் கண்டு கொள்ளத் தேவையில்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவின் தீர்மானத்தையும் மதிக்காமல் மத்திய குழு தேவை இல்லையென இருந்துவிட்டு தங்கள் முகமூடிகள் எல்லாம் பறந்து போயுள்ள நிலையில், அவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டு நீக்கிய முடிவு சரியானது என்பதை அனைவருமே வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர்.

மாநகரசபையில் தமிழினப் படுகொலை செய்ய பங்காளிகளாக இருந்த ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது மட்டுமல்லாமல் தங்களுடைய பதவிக்காக டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவோடு இணைந்து செயற்படுவதால் இவர்கள் யார் என்று தெரிந்து விட்டது.

ஆரியகுளத்தைப் புனரமைத்து சிங்கள தேசியவாத வளர்ச்சிக்கும இவர்கள் மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றனர். அவரது வெளிநாட்டுப் பயணமும் பிசுபிசுத்துப் போயுள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் தமிழ் தேசிய முலாம் பூசி தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு காலமும் மறந்து போய் அதை தூசு தட்ட முற்படுகின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அவர் உருவாக்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். நாங்கள் சட்ட மாணவர்களாக இருந்த போது இந்த கட்சியை உருவாக்கியது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மறைந்த பேராசிரியர் கென்னடி ஆகிய நான்கு பேருமே ஆகும். கட்சியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது.

அந்த நேரத்தில் ஒரு வேட்பாளராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சியின் உருவாக்கப்பட்ட பின்னர் சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!