நெருக்கடிக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க விசேட குழு அமைக்குமாறு கோரிக்கை!

நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்த நிலைக்குச் செல்லத் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரைத்தார்.
   
பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் தீர்மானங்கள் காரணமாக முழு நாடும் இன்று பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், இதனைக் குற்றமாகக் கருதி விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய வங்கி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன்தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக மத்திய வங்கி நேற்று கோப் குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தபோதே அதன் தலைவர் இந்தப் பரிந்துரையை வழங்கினார்.

இந்த நெருக்கடி நிலை ஏற்படுவதற்குப் பிரதான காரணம் என்ன என வினவப்பட்டபோது, பதிலளித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக 2020 மார்ச் – ஏப்ரல் மாதத்தில் கடன் உதவியைப் பெறச் சென்றபோது, இலங்கையின் கடன் நிலைபேறான நிலையில் இல்லை என்பது அவர்களினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

எனவே கடன் வசதியைப் பெற்றுக் கொள்வதாயின் கடன் மறுசீரமைப்புக்குச் செல்லவேண்டும் என நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநருக்கு நாணய சபை எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய நிதிச் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பக் கலந்துரையாடல்களின் பின்னர் மத்திய வங்கியின் நாணயச் சபையின் ஊடாக நிதி அமைச்சர் உள்ளிட்ட உயர்அதிகாரிகளுக்கு குறித்த தொழில்நுட்ப பரிந்துரையை அனுப்பியிருந்ததாகவும், நிதி அமைச்சு உள்ளிட்ட அமைச்சரவையின் ஊடாகவே அது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு சுட்டிக்காட்டினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!