மத்தல விமான நிலையத்துக்காக 325 மில்லியன் டொலரை முதலீடு செய்கிறது இந்தியா

மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை கொள்வனவு செய்து, சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து- இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை அதனை கூட்டு முயற்சியாக இயக்கவுள்ளது.

சிறிலங்கா அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் 18 அனைத்துலக விமான நிலையங்கள், 7 சுங்க விமான நிலையங்கள், 78 உள்நாட்டு விமான நிலையங்கள், 26 இராணுவ ஓடுபாதைகளில் சிவில் போக்குவரத்தை மேற்கொள்ளும் விமான நிலையங்கள் உள்ளிட்ட, 125 விமான நிலையங்களை இந்திய விமான நிலைய அதிகார சபை இயக்கி வருகிறது.

தமது நாட்டுக்கு வெளியே, அனைத்துலக விமான நிலையம் ஒன்றை இந்திய விமான நிலைய அதிகார சபை பொறுப்பேற்கவுள்ளது இதுவே முதல்முறையாகும்.

மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளைக் கொள்வனவு செய்யும் இந்திய விமான நிலைய அதிகாரசபை அதற்காக 325 மில்லியன் டொலரை முதலீடு செய்யும்.

எஞ்சிய 30 வீதம் சிறிலங்கா சிவில் விமானசேவை அதிகார சபையிடம் இருக்கும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

40 ஆண்டுகள் செல்லுபடியாகும் இந்த உடன்பாட்டின்படி, இந்திய விமான நிலைய அதிகாரசபை, மத்தல விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை பொறுப்பேற்கும். இதில் இந்திய நிறுவனம் ஒன்று ஈடுபடும்.

எனினும், விமானங்களின் பயணங்களையும், வான் பரப்பை பயன்படுத்துவதுவதையும் சிறிலங்காவே கட்டுப்படுத்தும் என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!