அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள் மனு மீதான விசாரணைகள் இன்று..

21 மற்றும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள் தொடர்பில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகளினதும் சில உள்ளடக்கங்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமைந்துள்ளமையினால் அவற்றை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுமாறு உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது,

இந்த நிலையில், கர்னல் அனில் அபேசேகர என்பவரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என சட்ட மா அதிபர் சார்பில் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகளின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்கள் பிரதமருக்கு வழங்கப்படுவது அபாயகரமானது என மனுதாரர் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுளளது.

அத்துடன், மக்களால் தெரிவு செய்யப்படாத, தேசியப்பட்டியலில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரதமர் பதவிக்கு நியமிக்கப்பட்டால் அவரினூடாக மக்களின் இறையாண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது எனவும் மனுதாரர் குறிப்பிட்டார்.

மேலும், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை அவ்வாறான ஒருவருக்கு வழங்குவது அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆவது சரத்துக்களுக்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த மனு மீதான விசாரணகள் இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!