மரக்கறி கொள்வனவு செய்ய விரைவில் வரிசையில் காத்திருக்க நேரிடும்: அருண சாந்த ஹெட்டியாரச்சி

மரக்கறி வகைகளை கொள்வனவு செய்யவும் விரைவில் வரிசையில் காத்திருக்க நேரிடும் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் மெனிங் வர்த்தக சங்கம் என்பனவற்றின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மூன்று மாதங்களின் பின்னர் நாட்டில் மரக்கறி பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வரிசையில் காத்திருப்பதனை தவிர்க்க முடியாது என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயிர்ச் செய்கையை கைவிட்ட விவசாயிகள்

மரக்கறி சந்தைக்கு சுமார் 70 வீதமான அளவு மரக்கறி வகைகளை நிரம்பல் செய்த சிறு விவசாயிகள் பயிர்ச் செய்கையை கைவிட்டுள்ளனர்.

நாட்டின் மொத்த விவசாயிகளில் 60 வீதமானவர்கள் சிறு விவசாயிகள். மரக்கறி செய்கையில் ஈடுபடும் சிறு விவசாயிகளில் 50 வீதமானவர்கள், மரக்கறி செய்கையை கைவிட்டுள்ளனர். எதிர்காலத்தில் ஏனைய விவசாயிகளும் செய்கையை கைவிடக் கூடும்.

இரசாயன உரத் தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற காரணிகளினால் இந்த நிலைமை உருவாகியுள்ளது. துறைசார் அமைச்சர்கள், அதிகாரிகள் கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து எடுக்கும் தீர்மானங்களை விவசாய நிலங்களில்நடைமுறைப்படுத்த முடியாது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாயின் அவர்கள் விவசாய நிலங்களுக்கு நேரில் வர வேண்டும். நாற்பது லட்சம் கிலோ நாளாந்தம் மரக்கறி விநியோகம் செய்யப்பட்ட போதிலும் தற்பொழுது அந்த தொகை 5 லட்சம கிலோவாக குறைவடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!