பொருட்களின் விலை அதிகரிப்புக்கு ரணில் பொறுப்பில்லை!

ஆரம்பத்திலேயே டொலரை கட்டுப்படுத்த தவறியமையே பொருட்களின் விலை அதிகரிப்புக்கு காரணம். ரணில் விக்ரமசிங்க அதற்கு பொறுப்பில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
    
நாட்டை நிர்வகிக்க வேண்டிய வழிவகைகளை ஐக்கிய தேசிய கட்சி கடந்த 2020 தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவாக குறிப்பிட்டிருந்தது.

அதில் தெரிவிக்கப்பட்டிருந்த அனைத்து விடயங்களும் தற்போது இடம்பெற்று வருகின்றது. எமது கொள்கையை மக்களுக்கும் தெரிவித்திருந்தாேம்.

பாராளுமன்றத்துக்கும் அறிவித்திருந்தோம். ஆனால் மக்கள் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக சிந்திக்காமல், இனவாதம் மதவாதத்தை தூண்டும் விடயங்கள் அடங்கிய தேல்தல் கொள்கைகளுக்கே ஏமாந்தனர்.

2022இல் இலங்கை 6.3பில்லியன் டொலர் கடன் செலுத்தவேண்டும் என 2021 வரவு செலவு திட்டத்தில் நாங்கள் தெரிவித்திருந்தோம். கடனை அடைப்பதற்கு தேவையான வழிமுறைகளை நாங்கள் தெரிவித்திருந்தோம். என்றாலும் அரசாங்கம் 2022 ஏப்ரல் மாதம் 3.3பில்லியன் டொலர் கடன் செலுத்தி இருந்தது.

ஏனைய தொகையை வருட இறுதியில் செலுத்தவேண்டி இருந்தது. என்றாலும் இதுதொடர்பில் எந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளாமல், பாராளுமன்றத்துக்கும் அறிவிக்காமல், நாடு வங்குதொத்து என ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தது. இது அரசியலமைப்புக்கு முரணாகும்.

கடன் செலுத்துவதற்கு நிதி அமைச்சுக்கு முடியாவிட்டால், திறைசேரிக்கும் முடியாது என்றால் அதுதொடர்பில் பாராளுமன்றத்துக்கு அறிவித்து, பாராளுமன்றம் அவசர நிதி சபையாக செயற்பட்டு தேவையான நிதியை பெற்றுக்கொள்ள அரசியலமைப்பின் 151இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை செய்யாமல் நாடு வங்குரோத்து என அறிவித்தது.

இந்நிலையிலேயே மே 9 நாட்டில் கலவரம் ஏற்பட்டு, பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகியது. நாட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையிலேயே ரணில் விக்ரமசிங்க அனுபவம் உள்ள தலைவர் என்றவகையில் பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டது முதல் நாடு செலுத்தவேண்டிய 55பில்லியன் டொலர் கடனை எவ்வாறு செலுத்துவதென அமெரிக்கா,சீனா. ஜப்பான் உட்பட அனைத்து நாடுகளுடன் கலந்துரையாடி வருகின்றார். சர்வதேச நாணய நிதியம்.

ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நாணய நிதியங்களுடன் கலந்துரையாடி வருகின்றார். நாடு எதிர்கொண்டுள்ள மோசமான வீழ்ச்சியில் இருந்து ஒரு வழிக்கு கொண்டுவரவே பிரதமர் முயற்சிக்கின்றார். இதனைத்தவிர வேறு வழியில்லை

அத்துடன் ரணில் விக்கரமசிங்க பிரதமரான பின்னரும் பொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அவரை விமர்சிக்கின்றனர். டொலரை கட்டுப்படுத்தினாலே விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியும். இது ஆரம்பத்தில் விட்ட தவறு. அதனால் இதனை உடனடியாக செய்ய முடியாது.
அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தில் நூற்றுக்கு 37 வீதத்தை சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் அனுபவிப்பதுடன் 63வீதத்தை ஏனைய சாரார் அனுபவிக்கின்றனர் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

இந்த அசாதாரண நிலைமையை போக்கும் வகையில் வரவு செலவு திட்டம் ஒன்றை அரசாங்கம் சமர்ப்பிக்க இருக்கின்றது.

அதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 6பில்லியன் டொலர் உதவிகளை பெற்றுக்கொள்ள ரணில் விக்ரமசிங்க முயற்சித்து வருகின்றார்.

அதில் 5பில்லியன் டொலர்களை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஒரு பில்லியன் டொலரை ரூபாவை பலப்படுத்த முதலீடு செய்வதற்கும் எதிர்பார்க்கின்றார்.

ஏனெனில் நாட்டின் 55பில்லியன் டொலர் கடனை அடைப்பதற்கான வேலைத்திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்க பிரதமர் உட்பட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அதனால் நாடு எதிர்கொண்டுள்ள இந்நிலையில் யாரும் குறுகிய அரசியல் லாபம் தேடாமல் நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!