ஜேர்மனியில் 3,518 பேரை கொலை செய்ய உதவிய 101 வயது முதியவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை!

ஹிட்லர் ஆட்சியில் நாசி வதை முகாமில் பணியாற்றிய நபருக்கு, ஜேர்மனி நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளித்துள்ளது.

ஜேர்மன் தலைநகர் பெர்லின் அருகே இரண்டாம் உலகப் போரின்போது வதை முகாம் அமைக்கப்பட்டது. ஹிட்லர் ஆட்சியில் அச்சமயம் 2 லட்சத்துக்கும் மேலான கைதிகள் அந்த முகாமில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தண்டனை என்ற பெயரில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் வரலாற்றில் கொடூரமான குற்றமாக பதிவாகியுள்ளது.
    
இந்த நிலையில், ஹிட்லர் காலத்தில் அவருக்கு ஆதரவாக பணியாற்றி குற்றம் செய்தவர்கள் மீது ஜேர்மனி அரசு விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் 1942-1945 ஆண்டு காலகட்டத்தில் நாசி வதை முகாமில் காவலராக பணியாற்றிய ஜோசப் ஷூட்ஸ் என்பவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவர் வதை முகாமில் 3,518 கைதிகளை கொலை செய்ய உதவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அப்போது 21 வயது இளைஞராக இருந்த ஜோசப்புக்கு தற்போது 101 வயதாகிறது. எனினும் அவருக்கு ஜேர்மனி நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணையின்போது, நான் ஒன்றும் செய்யவில்லை. இங்கு ஏன் இருக்கிறேன் என்று எனக்கு தெரியவில்லை என ஜோசப் ஷூட்ஸ் நீதிமன்றத்தில் கூறினார்.
ஆனால் அவர் தெரிந்தே தான் கொலை குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார் என்றும், அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!