தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ரணிலுக்கு பிரதமர் பதவி இல்லை – டளஸ் அழகப்பெரும

தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் நிச்சயமாக சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

எனினும், அந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படமாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். போராடும் மக்கள் ரணில் விக்ரமசிங்கவை நிராகரிப்பதாகவும், அப்படிப்பட்ட ஒருவரை பிரதமராக நியமிக்க தான் ஒருபோதும் தயாராக இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமைக்கப்படவுள்ள அனைத்து கட்சி அரசாங்கத்தின் பிரதமர் பதவி எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் டளஸ் அழகப்பெரும கருத்து வெளியிட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாளை நாடாளுமன்றில் வேட்புமனு தாக்கல் 

இதேவேளை, ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச அண்மையில் விலகினார். இதனையடுத்து பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். எனினும், அரசியல் அமைப்பின்படி ஏழு நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும்
.
இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, டளஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அந்த வகையில் நாளை நாடாளுமன்றில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு நாளை மறு தினம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அன்றைய தினமே புதிய ஜனாதிபதி குறித்த அறிவிப்பு வெளியாகும். இதன்படி, தற்போது இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் களம் மிகவும் சூடுபிடித்துள்ள நிலையில், டளஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!