“கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவது பொருத்தமானதல்ல” – பாதுகாப்பு தரப்பு!

நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன. இப்படியான தகவல் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னணி தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
  
சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கோட்டாபயவுக்கு அந்நாட்டில் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மாத்திரமே விசா அனுமதி வழங்கப்பட்டிருந்தது. எனினும் மேலும் 14 நாட்கள் விசாவை நீடிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்ததுடன் விசா காலம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், எப்போது கோட்டாபய நாடு திரும்புவார் என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள பொதுஜன பெரமுனவின் அந்த முன்னணி தலைவர், அது தொடர்பில் உறுதியான பதிலை வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் உரிய விசா அனுமதி காலத்திற்கு மேல் கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூரில் தங்க வைப்பதில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை அந்நாட்டுக்கும் ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ச இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு திரும்பி வருவது பொருத்தமானதல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வெளிநாட்டு ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!