சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஆதரவளிக்கும் எந்தவொரு தரப்பினருடனும் இணைந்து செயற்படுவோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று(13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கும், புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை.

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் யோசனை முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதில் சமரசம் செய்து கொள்ள முடியாத அரசியல் தரப்பினரால் நாட்டிற்குள் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க அரசாங்கம் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கின்றது.

சர்வகட்சி அரசாங்கத்தின் யோசனையை எந்தவொரு தரப்பும் மறுக்கும் பட்சத்தில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறுவோம்.அதற்கமைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.”என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!