மொட்டு கட்சியுடன் இணைந்து இராணுவ பாணி அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் திட்டம்: சிறிதுங்க ஜயசூரிய

“மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியை வகிக்கும் ரணில் விக்ரமசிங்க, ஹிட்லர் பாணி அரசாங்கத்தை அமைக்க காய் நகர்த்தி வருகின்றார்” என ஐக்கிய சோசலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்
.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“தொழிலாளர் வர்க்கம் தலைமையிலான இடதுசாரி சக்திகள், விவசாய அமைப்புகள், பெருந்தோட்ட மக்கள் மாத்திரமல்லாது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் ஒன்றிணைத்து பாரிய மக்கள் சக்தி ஊடாக ரணில் – ராஜபக்ச அரசாங்கத்தை விரட்டுவதே எங்களின் இன்றைய வேலையாகிவிட்டது.

அடுத்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஜனாதிபதி நடத்தமாட்டார். இராணுவ பொலிஸ் அரசை உருவாக்கும் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக பயங்கரவாத தடை சட்டத்தை இல்லாதொழிப்பதாக உறுதியளித்த தற்போதைய ஜனாதிபதி  இன்று வெட்கமின்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றார்.

இதன் மூலம் இந்த நாட்டின் எழுச்சி பெறும் மக்களின் வெறுப்பைக் கட்டுப்படுத்தலாம் என அவர் நினைத்துக் கொண்டிருக்கலாம். நாங்கள் சொல்கிறோம் ரணில், நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்வது தவறு.”என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!