விமல் தலைமையிலான கூட்டணி சவால் அல்ல!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் தான் தற்போது பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறித்து கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விமல் வீரவன்ச தலைமையிலான கூட்டணி எமக்கு ஒரு சவால் அல்ல என முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுவணவர்தன தெரிவித்தார்.
    
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பலவீனமடைந்து விட்டதாக ஒருசிலர் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள்.பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுன வசமே உள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக மாத்திரமே பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு புண்ணியம் கிடைக்கும் வகையில் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றிற்கு தெரிவாகியுள்ளவர்கள் தான் தற்போது பொதுஜன பெரமுனவிற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளார்கள்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் பாராளுமன்ற உறுப்பினரானார்.

பேராசிரியர் ஜி.எல் பிரிஸிற்கு பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் உயர் பதவியையும், அரசாங்கத்தில் முக்கிய அமைச்சினையும் வழங்கியது. இருப்பினும் அவர் தற்போது கட்சியின் கொள்கைக்கு முரணாக செயற்படுகிறார்.ஜி.எல் பீரிஸ் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் முக்கிய அமைச்சினை வகித்துக்கொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்திய விமல் வீரமவன்ச உள்ளிட்ட தரப்பினர் தற்போது பொதுஜன பெரமுனவிற்கு எதிராக பரந்துப்பட்ட கூட்டணியை அமைப்பதாக குறிப்பிட்டுக்கொள்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான கூட்டணி ஒன்றும் பொதுஜன பெரமுனவிற்கு சவால் அல்ல, பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் எதிர்வரும் நவம்பர் மாதமளவில் மறுசீரமைக்கப்படும். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் எத்தேர்தல்களிலும் பொதுஜன பெரமுன ஊடாகவே போட்டியிடுவோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!