செல்ல பிராணி போல் வளர்த்து வந்த முதியவரை கொன்ற கங்காரு- ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

சாதுவான விலங்காக கருதப்படும் கங்காரு ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்டது. இந்நிலையில் அந்நாட்டின் மேற்கு பகுதியில் மக்கள் தொகை குறைவாக உள்ள நகரமான ரெட்மண்டில் 77 வயது முதியவர் ஒருவர் உடலில் கடுமையான காயங்களுடன் தனது வீட்டில் கிடந்துள்ளார்.

இது குறித்து அறிந்த உறவினர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் மருத்துவ குழுவினர் ஆம்புலன்சில் சம்பவ இடத்திற்கு சென்ற போது அந்த நபரை அணுக விடாமல் கங்காரு ஒன்று தடுத்துள்ளது. தொடர்ந்து அச்சுறுத்தலாக இருந்ததால், அந்த விலங்கு சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த நபரை சோதித்தபோது அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்த விசாரணையின் அடிப்படையில் காங்காருவை அந்த முதியவர் செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். தற்போது அவரது உயிரிழப்பிற்கு கங்காரு தாக்கியதே காரணம் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் 1936 ஆண்டு நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஒரு பெரிய கங்காருவிடமிருந்து இரண்டு நாய்களை மீட்க முயன்ற வில்லியம் என்ற நபர் அந்த விலங்கால் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அதற்கு பின்னர் 86 ஆண்டுகள் கழித்து கங்காரு தாக்கி முதியவர் மரணமடைந்தது, அந்நாட்டின் அபாயகரமான தாக்குதலாக கருதப்படுகிறது




* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!