மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு!

ராஜபக்ஷாக்கள் முழுமையாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்று , பொதுஜன பெரமுன மறுசீரமைக்கப்பட வேண்டிய காலம் தோன்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக தெரிவித்தார், அத்தோடு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செல்லும் பாதையில் , வெற்றிகரமான பிரதிபலன்களைப் பெற்றுக் கொள்ள மக்கள் அவருக்கு வாய்ப்பளித்துள்ளனர்.

அதனை அவர் உணர்ந்து குறுகிய காலத்திற்குள் தீர்வுகளை வழங்காவிட்டால் , மீண்டும் மக்கள் எழுச்சி தோன்றுவதை எவராலும் தடுக்க முடியாது என்றும் சம்பிக ரணவக எச்சரித்தார்.
எதிர்க்கட்சிகள் விவேகமாக செயற்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும். தற்போது பொதுஜன பெரமுன வசம் மீண்டும் அதிகாரம் சென்றுள்ளமை எதிர்க்கட்சி இழைத்த தவறாகும். மக்களின் எழுச்சி போராட்டங்களின் பின்னர் எதிர்க்கட்சி ஆட்சியமைத்திருந்தால் , இன்று கைது செய்யப்படும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீரர்களாகியிருப்பர்.

தற்போது பாராளுமன்றத்திலுள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி ராஜபக்ஷாக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இது பாரதூரமான தவறாகும். இது ராஜபக்ஷாக்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டிய காலமாகும். அதே சந்தர்ப்பத்தில் பொதுஜன பெரமுன தமது தவறுகளை உணர்ந்து மறுசீரமைக்கப்பட வேண்டிய காலமுமாகும். அதனை செய்யாதவர்கள் எதிர்காலத்தில் அரசியலிலிருந்து காணாமல் போக வேண்டியேற்படும்.

எதிர்காலத்தில் நாட்டுக்கு தேவையாகவுள்ள சிறந்தவொரு அரசியல் சக்தியை உருவாக்கிக் கொடுப்பதே எமது இலக்காகும். அதில் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையும் என்று எண்ணுகின்றோம். இது அரசியல் கட்சியாக இருக்காது. காரணம் கட்சி அரசியல் மீது தற்போது நம்பிக்கை கொள்ள முடியாது. இது பாராளுமன்றத்தினுள் அமைக்கப்படவுள்ள சக்தியாகும்.

பாராளுமன்றத்திற்கு வெளியில் காணப்படும் மக்களின் நிலைப்பாட்டினை தேர்தல் இன்றி நிறைவேற்றக்கூடிய அரசியல் சக்தியாக இது காணப்படும். தற்போது பாராளுமன்றத்தில் எதிர்தரப்பில் 108 உருப்பினர்கள் உள்ளனர். இதனை 113 ஆக அதிகரிக்க வேண்டும். அதன் பின்னர் ராஜபக்ஷாக்களின் சிறைக்கைதிகளாக அன்றி தீர்க்கமான பயணத்தில் முன்னோக்கிச் செல்ல முடியும்.

கடினமான சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பொறுப்பேற்றிருக்கின்றார். எனவே ஆர்ப்பத்திலிருந்தே அவரை குறைகூறுவதை நாம் வழக்கமாகக் கொள்ளவில்லை. அவர்கள் செல்லும் பாதையில் சாதகமான பிரதிபலனைப் பெற்றுக் கொள்ள மக்கள் அவருக்கு வாய்ப்பளித்துள்ளனர். ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் 9 ஆம் திகதிகளில் அவரை பதவி விலக்குவதற்கான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு சிலர் முயற்சித்தனர். ஆனால் அதில் நாட்டு மக்கள் ஆர்வம் காண்பிக்கவில்லை.

இதனை அவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இது வாழ் முழுவதும் அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பல்ல. மக்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு. எனவே குறுகிய காலத்திற்குள் அவரது வேலைத்திட்டத்தை வெற்றிகரமானதாக்க வேண்டும். அவ்வாறில்லை என்றால் மீண்டும் மக்களின் எழுச்சி ஏற்படும். அதனை எவராலும் தடுக்க முடியாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!