கழுத்தை நெரிப்பதற்கு இடமளிக்க முடியாது!

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இலங்கையின் கழுத்தை நெரிப்பதற்கு இடமளிக்க முடியாது. நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை தொடர்ந்தும் அரசாங்கம் மறைத்துக் கொண்டிருக்குமாயின் அதற்கு எதிராக கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று சில தரப்பினர் நம்பினர். ஆனால் அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளைத் தவிர அவரால் வேறு ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? தற்போதைய தேவை எதிர்பார்ப்புக்களை உருவாக்கிக் கொண்டிருப்பதல்ல. பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதாகும். எமது முழு கடன் தொகையில் 80 சதவீதமானவை நல்லாட்சி அரசாங்கத்தில் பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதைத் தவிர இந்த அரசாங்கத்திடம் வேறு எந்த திட்டமிடலும் இல்லை.இவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற போதிலும், அவர்களால் எந்தவொரு உறுதியும் வழங்கப்படவில்லை. அதேபோன்று அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை இதுவரையிலும் பாராளுமன்றத்திற்கு வெளிப்படுத்தவில்லை.

எனவே இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்துபவர்களுக்கும், இந்த உடன்படிக்கையின் உள்ளடக்கத்தினை வெளிக்கொண்டுவர வேண்டிய பொறுப்பு காணப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இலங்கையின் கழுத்தை நெறிப்பதற்கு இடமளிக்க முடியாது. இந்த ஒப்பந்தம் அவ்வாறானதாகக் காணப்பட்டால் அதனை தொடர்வதற்கும் இடமளிக்க மாட்டோம்.எனவே ஒப்பந்தத்தை தொடர்ந்தும் மறைத்துக் கொண்டிருந்தால், அதற்கு எதிரான நடவடிக்கைகளை நிச்சயம் முன்னெடுப்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!