திலீபனை நினைவேந்தியோரை உடனே சிறைக்குள் தள்ளுங்கள்! – விமல் ஆவேசம்

மரணித்த புலிப் பயங்கரவாதியான திலீபனை வடக்கு, கிழக்கில் பகிரங்கமாக நினைவேந்தியவர்களை உடனடியாகச் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியுள்ளார் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் இருந்து மரணித்தவர்களை யாராவது பகிரங்கமாக நினைவுகூர்ந்தால் அவர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

மரணித்த புலிப் பயங்கரவாதியான திலீபனை வடக்கு – கிழக்கில் 12 நாட்கள் தமிழ் மக்கள் பகிரங்கமாக நினைவேந்தியுள்ளார்கள். திலீபனின் படத்தைத் தாங்கிய ஊர்திப் பவனிகளும் வீதிகளில் வலம் வந்துள்ளன.

சிங்கள மக்களைச் சினமூட்டும் வகையில் தமிழ் மக்களும், தமிழ் அரசியவாதிகளும் நடந்துகொண்டுள்ளார்கள். சமூக வலைத்தளங்களில் கூட திலீபனைத் தமிழ் இளைஞர்கள் நினைவேந்தியுள்ளார்கள்.

இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். பாதுகாப்பு அமைச்சு இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வைப் பொலிஸாரும், படையினரும் ஏன் தடுக்காமல் இருந்தார்கள்? எவரின் உத்தரவின் பேரில் பொலிஸாரும் படையினரும் அமைதி காத்தார்கள்? என்றார். 







* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!