கட்சியில் ஒழுக்கத்தை காக்க பிரம்பை கையில் எடுத்துள்ள மகிந்த ராஜபக்ச

கட்சியின் ஒழுக்கத்தை மீறும் எந்த தகுதியில் இருக்கும் மக்கள் பிரதிநிதியாக இருந்தாலும் எடுக்க வேண்டிய உச்சபட்ச ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச, கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

அண்மையில் தம்புத்தேகமவில் நடந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதை கவனத்தில் கொண்டு மகிந்த ராஜபக்ச இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடப்பதால், அந்த நடவடிக்கைகளுக்கு தடையேற்படுகிறது.
இதனால், கிராமங்களில் கட்சியின் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

பொதுஜன பெரமுனவை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், இனிவரும் காலங்களில் இவ்வாறான நிலைமை தவிர்க்க கட்சிக்குள் கூடியளவில் ஒழுக்கத்தை பேண வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச, சாகர காரியவசத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தம்புத்தேகம பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்க அந்த கட்சி நடவடிக்கை எடுத்தது.

கொள்ளை சம்பவத்திற்கும் அவருக்கும் தொடர்புள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், பிரதேச சபை உறுப்பினர் பதவியும் பறிக்கப்படும் என சாகர காரியவசம் கூறியுள்ளார்.

கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எந்த கட்சியிலும் ஒழுக்கம் தொடர்பான பிரச்சினை ஏற்படலாம். அவற்றை குறைத்து மீண்டும் நாட்டில் ஆட்சியை கைப்பற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருக்கின்றது.

கட்சியின் ஒழுக்கத்தை மீறும் எவராக இருந்தாலும் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!