அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு! நாடாளுமன்றில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள குறைப்பு தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை குறைக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வேதன குறைப்பு தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்காக அரசாங்கம் மாதாந்தம் 119 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது.

இதில் ஊழியர்களின் வேதனத்துக்காக 93 பில்லியன் ரூபாவும், ஓய்வூதியத்துக்கு 26 பில்லியன் ரூபாவும் செலவிடப்படுகிறது. வருடாந்தம் 1428 பில்லியன் ரூபா அரச ஊழியர்களின் சம்பளம் மற்று ஓய்வூதியத்துக்காக ஒதுக்கப்படுகிறது.

அதிகரித்துவரும், பணவீக்கத்துக்கு மத்தியில் ஏனையோரை போலவே அரச ஊழியர்களும் கடும் அழுத்தத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களின் சம்பளங்களை குறைத்து, அவர்களை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்க அரசாங்கம் ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது.

எனவே, அரச ஊழியர்களின் பணியை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மீண்டெழும் செலவுகளில் அரச ஊழியர்களுக்கான வேதனம் மற்றும் ஓய்வூதியம் என்பன அத்தியாவசியமானது எனக் கருத்திற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு வயது தொடர்பான அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது.அதன்படி அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வூதிய வயதை 60ஆக மாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உத்தேச அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60ஆக மாற்றியமைக்கும் முன்மொழிவொன்று முன்வைக்கப்பட்டிருந்தது.

இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஏற்பாடுகளை வகுத்து அதற்கான சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்குவது தொடர்பான திருத்தங்கள் அடங்கிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!