மீண்டும் களத்தில் கோட்டாபய! இரகசிய நகர்வுகள் தீவிரம்

அண்மையில் நாடு திரும்பிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தமக்கு ஏற்பட்ட தோல்வி பிம்பத்தைத் துடைக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதற்காக இரகசிய பிரசாரத்தை, அவர் ஆரம்பித்துள்ளார் என ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக, கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது ‘கம சமக பிலிசந்தர’ திட்டத்தின் கீழ், அவர் விஜயம் செய்த கிராமங்களுக்கு தற்போது ஊடகவியலாளர் மற்றும் வர்த்தக அதிபர் ஒருவரால் அமைக்கப்பட்ட குழுவொன்று விஜயம் செய்து வருகிறது.
மீண்டும் அரசியலில் நுழைய முடியுமா

மீண்டும் களத்தில் கோட்டாபய! இரகசிய நகர்வுகள் தீவிரம் | Gotabaya Begins Secret Campaign
இந்த உறுப்பினர்கள் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர். இந்த கிராமங்களில் கோட்டாபய ராஜபக்ச மீதான மக்களின் கருத்துக்களை அறியவும், முன்னாள் ஜனாதிபதி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளதா என்பதை சோதிப்பதற்காகவும் கருத்துக் கணிப்புகள் நடத்தப்படுகின்றன.

“வியத்மக” அணிக்கு நிகரான இந்தக் குழுவால் நடத்தப்படும் இந்த சமூக ஊடக ஆய்வு, தோல்வியடைந்த ஜனாதிபதி எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அரசியலில் நுழைய முடியுமா என மக்களின் உணர்வுகளைக் கண்காணித்து வருகின்றது.

எனினும் தற்போது அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்படவில்லை. மறுபுறம், ராஜபக்ச அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எவ்வாறாயினும், இந்த அந்தஸ்து வழங்கப்பட்டாலும், ராஜபக்ச தொடர்ந்து நாட்டில் தங்கியிருப்பார் என்றும், தனது மகன் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க மட்டுமே அமெரிக்கா செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாக, அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், முன்னாள் ஜனாதிபதிக்கு பல தடவைகள் கரிம உரக் கொள்கையை நடைமுறைப்படுத்த  வேண்டாம் என அறிவிக்கப்பட்டதாகவும் கட்சித் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் இதில் ஒருவராவார்.

கோட்டாபய ராஜபக்சவின் பெயர் கட்சியிலிருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என்றும், அவரிடமிருந்து கட்சி விலகி இருக்க வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூத்த தலைவர்கள் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் கட்சியை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவல்ல என்பதனால் தற்போதைய ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயற்படுமாறும், அவருக்கு உதவுமாறும் மகிந்த ராஜபக்ச கட்சிக்கு அறிவித்துள்ளார்.

முன்னதாக, கோட்டாபய ராஜபக்ச, கட்சி உறுப்பினர்கள் எவருடனும் கலந்து ஆலோசிக்காமல் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்றும் அவர் அவ்வாறு தப்பிச் சென்றிருக்கக் கூடாது என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!