அடக்குமுறைகளை மேற்கொண்டால் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டி வரும்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அரசாங்கமானது பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதை விடுத்து, இளம் தலைமுறையினரை கைது செய்யும் செயற்பாட்டையே தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர், காங்கேசன் துறையிலிருந்து ஹம்பாந்தோட்டைவரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருந்தோம்.

இன்று நாட்டில் உள்ள அனைத்து மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு உணவு கூட இன்று இல்லை. மேலும், வசந்த முதலிகே உள்ளிட்ட போராட்டத்தின் ஈடுபட்ட பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

47 நாட்களாக இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் செய்ய தவறு என்ன என்பதை நாடாளுமன்றில் வெளிப்படுத்த வேண்டும். 2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என 300 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தச் சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் தொடர்பான விசாரணைக்கு என்ன நடந்தது? அந்த இளைஞர்கள் செய்த தவறு என்ன?
பல தமிழ் இளைஞர்கள் வருடக்கணக்கில் சிறையில் உள்ளார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அல்லது அவர்களின் வழக்கு விசாரணைகளையேனும் துரிதப்படுத்த வேண்டும்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருந்து அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவோர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
முகநூலில் கருத்து வெளியிட்டார்கள் என்றுக்கூட சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இளம் தலைமுறையினரை கைது செய்ய என்ன காரணம்? இவர்கள் செய்த பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ன?இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நிச்சயமாக விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!