தொடர் தோல்வியை சந்தித்து வரும் ரஷ்யா!

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கெர்சன் பிராந்தியத்தின் பரந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. பல மாதக்கணக்கில் நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்யா போரின் உச்சக்கட்டமாக, கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய நான்கு உக்ரைனிய பகுதிகளை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது.

மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இணைப்பு விழாவில் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்ய பகுதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்தவும் ரஷ்யா தயங்காது என எச்சரித்தார்.

இந்நிலையில் உக்ரைனின் தெற்கு பகுதியை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டதாக ரஷ்யா அறிவித்ததை அடுத்து, கெர்சனில் உள்ள 400 சதுர கிலோமீட்டர் (155 மைல்) பகுதியை மீண்டும் கைப்பற்றி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரைனின் தெற்கு ராணுவக் கட்டளையின் செய்தி தொடர்பாளர் நடாலியா குமேனியுக், அக்டோபர் தொடக்கத்தில் இருந்து இதுவரை உக்ரைன் ஆயுதப்படை கெர்சன் பிராந்தியத்தின் 400 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பகுதிகளை விடுவித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் Dudchany, Sukhanove, Sadok மற்றும் Bruskinskoe அருகே உக்ரைனிய துருப்புகள் நான்கு தந்திரோபாய பட்டாலியன்களை நிலைநிறுத்தியதாகவும், எங்கள் பாதுகாப்பை உடைக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்ததாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.மேலும் தெற்குப் பகுதியில் ரஷ்ய பாதுகாப்பு கோட்டுடன் உக்ரைனிய படைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.

கெர்சனைச் சுற்றியுள்ள பிராந்தியத்தின் Novovoskresenske, Novogrygorivka மற்றும் Petropavlivka ஆகிய கிராமங்களை உக்ரைனிய ராணுவம் மீண்டும் கைப்பற்றியதாக புதன்கிழமையன்று உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!