சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது!

இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட புதிய பிரேரணையில் இந்தியா,ஜப்பான் உள்ளிட்ட பெரும்பாலான நட்பு நாடுகள் நடுநிலைமை வகித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.அரசாங்கத்தின் ஒருசில செயற்பாடுகளினால் சர்வதேசம் இலங்கையை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது,ஆகவே வெளிவிவகார கொள்கை நிச்சயம் மறுசீரமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற ஜனாதிபதியின் சிறப்பு உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

2015ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேசம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச அரங்கில் தொடர்ச்சியாக பேசப்பட்டு இலங்கையை சர்வதேச நாடுகள் புறக்கணிக்கும் நிலை காணப்பட்டது.

2015ஆம் ஆண்டு மக்களாணையுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து சர்வதேசத்தின் ஒத்துழைப்பையும்,நன்மதிப்பையும் பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.நல்லாட்சி அரசாங்கம் சர்தேசத்தின் மத்தியில் நன்மதிப்பை பெற்றது.
கடந்த இரண்டரை வருட காலத்திற்குள் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து சர்வதேசம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.பொருளாதார பாதிப்புக்கான காரணத்தை சர்வதேசம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இலங்கையின் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பில் புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த பிரேரணைக்கு 20 நாடுகள் ஆதரவாகவும்,7 நாடுகள் எதிராகவும் வாக்களித்துள்ளதுடன்,20 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இந்தியா,ஜப்பான் உள்ளிட்ட பெரும்பாலான நட்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளாமல் நடுநிலை வகித்துள்ளமை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.ஜப்பான்,இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தீர்மானம் இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிலையை வெளிப்படுத்தியுள்ளது. சர்வதேசத்தை பகைத்துக்கொண்டு தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து ஒருபோதும் மீண்டெழ முடியாது,ஆகவே வெளிவிவகார கொள்கை கட்டாயம் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!