ராஜபக்ஷவினர் மீதான வெறுப்பை தீவிரப்படுத்துகிறார் ஜனாதிபதி!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்தும் முயற்சியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ளார். ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டமிட்ட வகையில் தீவிரப்படுத்துகிறார் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்துள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதால் தமது கட்சி பலவீனமடையும் என்பதை பொதுஜன பெரமுனவினர் வெகுவிரைவில் விளங்கிக் கொள்வார்கள். நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவான தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை.

வரி வீத அதிகரிப்பின் ஊடாக நாட்டு மக்களை பொருளாதார ரீதியில் மென்மேலும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளார்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்காக நாட்டு மக்களின் கழுத்தை நெரிப்பது வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.

அரசியல் ரீதியில் மாற்றத்தை ஏற்படுத்த நாட்டு மக்கள் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் அரசியல் கட்டமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படும்.மாகாண சபை தேர்தலை பிற்போட்டதை போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலையும் பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவை பலவீனப்படுத்தி,ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் பலப்படுத்த அவதானம் செலுத்தியுள்ளார்.பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்ஷர்கள் தான் காரணம் என்பதை நாட்டு மக்களிடம் அழுத்தமாக குறிப்பிட்டு அதனூடாக அரசியல் இலாபம் பெற்றுக்கொள்ள முயற்சிக்கிறார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ளது.திட்டமிட்ட வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்,இல்லாவிடில் நீதிமன்றம் செல்வோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!