22வது திருத்தச் சட்டத்தை எதிர்க்கவில்லை:சமூகத்தில் நிலவும் கருத்தில் உண்மையில்லை- சாகர காரியவசம்

நாடாளுமன்றத்தில் இந்த வாரம் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ள 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமாக இன்று நடைபெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என அந்த கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை பொதுஜன பெரமுன எதிர்ப்பதாக சமூகத்தில் நிலவும் கருத்தில் உண்மையில்லை. திருத்தச் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுகிறது.

அதற்கு இணையாக நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்படாததையே பொதுஜன பெரமுன எதிர்க்கின்றது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படுவதை பொதுஜன பெரமுன 100க்கு 200 வீதம் ஏற்றுக்கொள்கிறது.

அதற்கு இணையாக நாடாளுமன்றத்தின் அதிகாரமும் கட்டாயம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு தேவையான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் சாகர காரியவசம் கூறியுள்ளார்.

22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் சம்பந்தமான விவாதம் எதிர்வரும் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. கடந்த 6 ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் இந்த திருத்தச் சட்டத்தை விவாதத்திற்கு எடுப்பதற்காக அது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

எனினும் அன்றைய தினங்களில் அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை பெற்றுக்கொள்வது தொடர்பில் காணப்பட்ட நிச்சயமற்ற நிலைமையால் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இம்முறையும் அப்படியான நிலைமை ஏற்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!